காதலன் வேறொரு பெண்ணை காதலித்ததால் மனமுடைந்த வடமாநில இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள தோளூர் பகுதியில் தனியார் கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோழி பண்ணையில் சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராம்பத்தி என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்பத்தி தனது சொந்த ஊரில் வசிக்கும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இவர்கள் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதற்கிடையே ராம்பத்தியில் காதலன் வேறு ஒரு பெண்ணையும் காதலிப்பதாக அவருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராம்பத்தி நாமக்கல்லில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மோகனூர் காவல்துறையினர் ராம்பத்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.