தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வரலாறு காணாத பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கம் முதலே மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது “தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்” என்று தெரிவித்துள்ளது.