திமுகவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிமுக முழு ஆதரவு தரும் என ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கான நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். இதனை நிறைவேற்றி தர்மபுரி மக்களின் வயிற்றில் பால் வார்த்தவர மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா.1986 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்பு பல்வேறு காரணங்களாலும் ஆட்சி மாற்றத்தாலும் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாமல் 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் மீண்டும் துவங்கி வைக்கப்பட்டது.
பின்னர் பல்வேறு கட்ட தடைகளைத் தாண்டி இந்த திட்டம் 21.5.2013 அன்று ஜெயலலிதாவால் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அனைத்து திட்டங்களையும் கர்நாடக அரசு எதிர்ப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சட்டப்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை திறந்து விடாமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தில் தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வரும் கர்நாடக அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து உரிமைகள் மற்றும் கடமைகள் தமிழக அரசுக்கு உள்ளது. இதனை அரசு நிறைவேற்றி அதிமுக தனது முழு ஒத்துழைப்பை தரும்.” இவ்வாறு அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.