தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தகுதித் தேர்வு ஆசிரியர்கள், தகுதித் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு ஆசிரியராக பணியாற்ற முடியும். இந்த தகுதித் தேர்வானது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் வருங்கால சமுதாயத்தை கட்டமைப்பதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் தகுதியான ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும்.
இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் வாயிலாக சான்றிதழை பெற முடியும். அதுமட்டுமின்றி இந்த சான்றிதழ் 7 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின் மறுபடியும் தேர்வு எழுத வேண்டும் அல்லது மறுமதிப்பீட்டு முறை மூலமாக சான்றிதழை மேலும் சிறிது காலத்திற்கு நீட்டித்து கொள்ளும் வசதிகளும் இருக்கிறது. மேலும் பல்வேறு துறைகளில் உள்ள 9494 காலிப் பணியிடத்தை நிரப்ப இந்த வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதையடுத்து இந்த வருடத்துக்கான தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வானது வரும் ஏப்ரல் 2-வது வாரத்தில் நடக்கும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு கலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த பணியில் 1334 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களை பெற http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.