பழிவாங்கும் எண்ணத்தில் செய்யவில்லை திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்கும் பிளான்ட் நிறுவப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆயிரம் லிட்டர் அளவில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பிளான்ட் ஒன்று புதிதாக நிறுவப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் நிறைவேற்றுங்கள் என கூறி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஊழல் செய்தவர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் செயல்படுவதாக கூறுகின்றனர்.கடந்த 2014ஆம் ஆண்டு அமைச்சர்கள் வேட்பு மனு தாக்கலின் போது காட்டிய சொத்து மதிப்பிற்கும் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர்கள் வேட்புமனு தாக்கலுக்கு காட்டிய சொத்து மதிப்பிற்கும் இடையே இவ்வளவு பெரிய வித்தியாசம் எவ்வாறு வந்தது.? ஏனெனில் அங்கே ஊழல் நடந்துள்ளது..! இதுதொடர்பாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அது தொடர்பாக ஆலோசிக்கப்படும்.” என அவர் கூறினார்.