நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் பள்ளிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அந்த வகையில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்வி செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அரசின் இந்த முடிவால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே இன்னும் 10-15 நாட்களில் மீண்டும் பள்ளிகளை தொடங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் நாளை ( ஜனவரி 24-ஆம் தேதி ) 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நேரடி வகுப்புகள் செயல்படும். இதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று கல்வியமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.