இந்திய பெருங்கடலில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன.
இந்திய பெருங்கடலில் அமெரிக்க நாட்டின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காகவும் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மூன்று நாடுகளை சேர்ந்த கடற்படைகளும் இறுதியாக கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டிருந்தது.
இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இந்த நாடுகள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டிருப்பது இந்திய பெருங்கடல் பகுதியில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. ஈரான் நாட்டைச் சேர்ந்த 11 கப்பல்கள், ரஷ்யாவின் மூன்று கப்பல்கள் மற்றும் சீனாவை சேர்ந்த இரண்டு கப்பல்களும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.
இது பற்றி மூன்று நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்தப் பயிற்சிக்கான முக்கிய நோக்கம், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தான். மேலும் இந்த பயிற்சியில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் போர்க்கப்பலை எவ்வாறு மீட்க வேண்டும்? கடத்தப்பட்ட கப்பலை எவ்வாறு விடுவிக்க வேண்டும்? இரவு சமயங்களில் போர்க்காலத்தில் இலக்குகளை எப்படி சரியாக தாக்கவேண்டும்? போன்ற பல போர் தந்திரங்கள் வீரர்களுக்கு கற்றுக் தரப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.