பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியது சரி தான், ஆனால் அதனை செயல்படுத்துவதில் திமுக அரசாங்கம் கோட்டை விட்டதாக சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார்.
பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டது. 1297 கோடி ரூபாய் மதிப்பில் 2.15 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. எனினும், பரிசு தொகுப்பு தாமதமாக வழங்கப்பட்டதாகவும், தரமில்லாமல் இருந்ததாகவும் பல புகார்கள் எழுந்தது.
எனவே, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது தொடர்பில் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் தரமில்லாத பொருட்களை கொடுத்த நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அந்த நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் நடந்திருக்கிறது என்று அதிமுக மற்றும் பாஜக உட்பட பல கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பில் சவுக்கு சங்கர் தெரிவித்திருப்பதாவது, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறதா? என்பது தொடர்பில் தற்போது உறுதியாக தெரிவிக்க முடியாது.
எனினும் ஊழல் நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது, கடந்த அக்டோபர் மாதத்திலேயே பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் கொடுக்க வேண்டுமா? பரிசு தொகுப்பு வழங்க வேண்டுமா? என்பதை அரசாங்கம் தீர்மானித்திருக்க வேண்டும். தி.மு.க அரசாங்கம் பொங்கல் பரிசு தொகுப்பு அளிக்கும் தீர்மானத்தை தாமதமாக மேற்கொண்டது தான் இந்த குழப்பங்களுக்கு காரணம்.
அதே நேரத்தில் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் வழங்கினால், அது குடும்ப தலைவர்களிடம் சென்று மீண்டும் டாஸ்மாக்கிற்கே வரும். இதற்கு பதிலாக பரிசு தொகுப்பை வழங்கினால் அது அனைத்து குடும்பத்திற்கும் பயன்பெறும் என்று அரசு திட்டமிட்டது சரியானது மற்றும் வரவேற்கக்கூடியது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்படுவதில் தான் குழப்பம் நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.