டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வாகனம் இடம் பெறாததற்கு மாநில அரசுதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஜெய் குருஜி சமாதியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெய் குருஜியின் முழு உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “தமிழக பாடநூலில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் குறிப்பாக தமிழில் புரட்சி செய்த பாரதியின் பாடல்கள், கவிதைகள் போன்றவை இடம் பெற வேண்டும். அதேபோல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அவரின் படை தளபதி குயிலி ஆகியோரின் வரலாறு சேர்க்கப்பட வேண்டும் என முதலமைச்சரை பாஜக சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வாகனம் இடம்பெறாதது சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதுவே தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக உள்ளது. இதற்கு முழு பொறுப்பும் தமிழக அரசை தான் சேரும்.
கடந்த மூன்று வருடங்களாக குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வாகனம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மட்டும் ஏன் இடம் பெறவில்லை இதில் மாநில அரசுக்கு தான் முழு பொறுப்பு. இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை. இதன் மூலம் மத்திய அரசை வசைபாடி திமுக அரசியல் லாபம் தேடுகிறது. மேலும் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். உண்மை என்ன என்பதை நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும். அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உண்மையாக இருக்குமேயானால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கப் பெற வேண்டும். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.” என அவர் கூறினார்.