தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இந்தத் திட்டத்தை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிலுள்ள பொருட்கள் தரமானதாக இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வருவதையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவிளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிலுள்ள மண்டலத்தில் நோயாளிகளுக்கு ஊசி போட பயன்படுத்தும் சிரஞ்சி ஒன்று இருந்ததை இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் திருத்தணி அருகே புளி பொட்டலத்தில் இறந்த நிலையில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இவ்வாறாக தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பினை பற்றி புகார்களும், குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகிறது.
இவற்றை சரி செய்ய முதல்வர் நேரடியாக நியாயவிலை கடைகளுக்கு சென்று ஆய்வு செய்வதுடன், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாக ஆய்வு செய்து பொங்கல் பொருட்கள் வினியோகம் பணியை விரைவு படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். இருந்த போதிலும் இந்தப் பிரச்சனை தீராது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.