பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு உணவுத்துறை அமைச்சர் பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக கூறினார். 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகள் கொடுக்கப்படுவதாக கூறிவிட்டு வெறும் 18 பொருட்களே அந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. மேலும் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற கரும்புக்கான கொள்முதல் விலையை 33 ரூபாய் என கூறிவிட்டு வெறும் 18 ரூபாய்க்கு விவசாயிகளிடம் வாங்கியதாக கூறினார். அதோடு மட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு செலவில் 13000 கோடி கணக்கு காட்டிவிட்டு வெறும் 500 கோடிக்கு தான் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன எனக் கூறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் நடந்துள்ளது என்றும் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது மற்றும் தரமற்ற பொருட்கள் உள்ளது என்று கூறுவது அப்பட்டமான பொய். 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிப்படையான டெண்டர் அறிவிப்பு மூலம் ரூபாய் 74.75 கோடி மீதப்படுத்தப்பட்டுள்ளது. இது தெரியாமல் வாய்க்கு வந்த படியெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எதிர்க்கட்சித் தலைவருக்கு கைவந்த கலை. மேலும் அவர் என்னோடு விவாதிக்க தயாரா..,? “என கேள்வி எழுப்பியுள்ளார்.