காயமடைந்த குட்டி யானையை வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த 2 வயதுடைய குட்டி யானை வனப்பகுதியையொட்டி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிக்கிவிட்டது. இதனால் குட்டி யானையின் துதிக்கை மற்றும் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்ததும் வனத்துறையினர் குட்டி யானையை மீட்க முயற்சி செய்வதற்குள் அது வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயன் குட்டி யானையை மீட்டு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி வாசகர்கள் முருகேசன், சுகுமார், கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் டிரோன் கேமரா மூலம் குட்டி யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.