இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருவதால் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. அதே சமயத்தில் இந்த அலை எப்போது உச்சம் தொடும் என்று கேள்வி எழுத்துள்ளது. இது குறித்து பேராசிரியரும், கொரோனா சூத்ரா மாதிரியுடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளருமான கான்பூர் ஐஐடி விஞ்ஞானி மணீந்திர அகர்வால் கணித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் கடந்த ஒரே வாரத்தில் கொரோனா மூன்றாவது அலை முன்பே உச்சம் தொட்டு விட்டது. மேலும் மராட்டியம், கர்நாடகம், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா போன்ற மாநிலங்களில் இந்த வாரமும், ஆந்திரா, அசாம், தமிழ்நாட்டில் அடுத்த வாரமும் உச்சம் தொடும்.
வருகிற ஜனவரி 23-ந் தேதி தேசிய அளவில் 3-வது அலை உச்சம் தொடும். எனினும் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்குள்தான் இருக்கும். இதற்கிடையில் 11ஆம் தேதி வரையிலான தரவுகளைக் கொண்ட பாதையானது, ஒரு நாளில் கிட்டத்தட்ட 7.2 லட்சம் பாதிப்புகளுடன் ஜனவரி 23-ந் தேதி உச்சநிலையை காட்டுகிறது. அத்துடன் உண்மையான பாதை ஏற்கனவே கணிசமாக விலகுகிறது. ஆகவேதான் தினசரி பாதிப்பு 4 லட்சத்தைக் கடக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறேன். நாடு முழுவதிலும் பாதைகள் கணிசமாக மாறி வருகிறது. இவற்றிற்கு மாற்றப்பட்ட சோதனை உத்திக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்கள் காரணமாக இருக்கலாம் என்று நான் முன்பே யூகித்தேன். இருப்பினும் பல்வேறு இடங்களிலும் இந்த வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படவில்லை.
மக்கள் தொகையில் 2 பிரிவினர் இருக்கின்றனர். இதில் ஒரு பிரிவினர், ஒமைக்ரானுக்கு எதிராக குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், மற்ற பிரிவினர் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். இதனிடையில் முதலாவது பிரிவினரில் கொரோனா தொற்று பரவியதால் அதிக நபர்கள் பாதிப்புக்கு ஆளாகினர். தற்போது முதல் பிரிவினருக்கு கொரோனா தொற்று முடிந்து விட்டது. கடந்த வருடம் நவம்பரில் ஒமைக்ரான் பரவத்தொடங்கியபோது நிறைய கவலைகள் இருந்தது. இருந்தாலும் கடந்த வாரம் அல்லது அதற்கு மேல் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இந்த ஒமைக்ரான் மாறுபாடு லேசான நோய்த்தொற்றை மட்டுமே ஏற்படுத்துகிறது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனைக்கு பதிலாக நிலையான மருத்துவ சிகிச்சை மூலமாக அதை கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.