தமிழகத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்துவதும், அதனால் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும், முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கம் சேஷாத்திரி அவென்யூவில் ராஜன் சையல் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக முத்துக்குமார், அப்பு ஆகிய இருவரும் இறங்கி சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி மயங்கி உள்ளனர். இதனால் பதட்டமடைந்த வீட்டின் உரிமையாளர், தீயணைப்புத் துறையினருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் விரைந்து அழைத்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அப்பு என்பவரை காவல்துறையினர் ஜிப்ஸி வாகனத்தில் அழைத்துச் சென்று சோதித்த போது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.