உச்ச நீதிமன்றத்தில் 2 தலைமை நீதிபதிகள் உட்பட 8 நீதிபதிகள் இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் யுயூ லலித்தும் நவம்பர் மாதம் ஓய்வு பெற்றுவிடுவார். பின்னர், அவருக்கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்க உள்ளார். இவர், 2024ம் ஆண்டு வரை தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். 2024ம் ஆண்டு நவம்பரில் சந்திரசூட் ஓய்வு பெறும்போது, உச்ச நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளும் ஓய்வு பெற்று விடுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 4ம் தேதி நீதிபதி சுபாஷ் ரெட்டி ஓய்வு பெற்றார்.
நீதிபதி வினித் சரண் மே 10ம் தேதி ஓய்வு பெறுவார், நீதிபதி நாகேஸ்வர ராவ் ஜூன் 7ம் தேதி ஓய்வு பெறுவார். மேலும் நீதிபதி கான்வீல்கர் ஜூலை 29ம் தேதி, மற்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி செப்டம்பர் 23ம் தேதியும், நீதிபதி ஹேமந்த் குப்தா அக்டோபர் 16ம் தேதியும் ஓய்வு பெற உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் 34 ஆக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக குறைந்துவிடும். இதனால் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால், இவர்கள் விசாரித்து வரும் வழக்குகளிலும் தீர்வு காண முடியாத அபாயம் உருவாகும். உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.