தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரொக்கப் பரிசு அறிவிக்கப்படவில்லை.
முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று வரும் முதல் பொங்கல் பண்டிகை என்பதால், ரொக்கப் பரிசு வழங்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது,பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசு வழங்க முடியாமல் போனதற்கு அதிமுகவே காரணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.