பசிபிக் பெருங்கடலில் வெடித்து சிதறிய எரிமலையிலிருந்து சுமார் 20 கிமீ உயரத்திற்கு சாம்பல் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் டொங்கா என்ற தீவு நாட்டில், 1,06,000 மக்கள் வசிக்கிறார்கள். அந்நாட்டில், நிலப்பகுதி மற்றும் கடலில் அதிகமான எரிமலைகள் இருக்கிறது. அதில், டொங்கா என்னும் மிகப்பெரிய எரிமலையின் பெரும்பகுதி, பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் உள்ளது.
இந்த எரிமலை செயலற்ற நிலையில் உள்ளது என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் திடீரென்று அதிக சத்தத்துடன் இந்த எரிமலை வெடித்து சிதறியது. இதில், கடலில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு சாம்பல் வெளியேறியது. மேலும், வானத்தில் 20 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் அதிகமாக பறந்ததாக செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரியவந்திருக்கிறது.
பெருங்கடலில், சுனாமி அலைகளும் உண்டானது. இதனால், அதிகளவில் சுனாமி அலைகள் உண்டாகக்கூடிய ஆபத்து உள்ளது என்று டொங்கா மட்டுமல்லாமல் நியூசிலாந்து நாட்டிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பயத்தில் உள்ளனர். இதனிடையே, அப்பகுதி மக்களை பத்திரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.