தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் காலை 8 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் , 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர்.
அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் 23 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை தட்டிச் சென்றார். அதேபோல் வலையங்குளத்தை சேர்ந்த முருகன் என்ற மாடுபிடி வீரர் 19 காளைகளை பிடித்து இரண்டாவது பரிசான ஜீ பிடர் பைக்கை தட்டி சென்றார்.
மேலும் அவனியாபுரத்தை சேர்ந்த சேதுராமன் என்பவர் மூன்றாவது பரிசான சைக்கிளை வென்றார். அதோடு மட்டுமில்லாமல் திருச்சி மணப்பாறையை சேர்ந்த தேவசகாயம் என்பவருக்கு சிறந்த மாட்டிற்கான முதல் பரிசாக கன்று மற்றும் பசுமாடு வழங்கப்பட்டுள்ளது.