விசாரணைக்கு பயந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியில் நந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருப்பதாக நந்தன் தகவல் பரப்பியதாக கூறி அதே பகுதியில் வசிக்கும் ரேஷன் கடை விற்பனையாளரான சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் நந்தனின் மூத்த மகனான குப்புசாமி என்பவர் தனது தந்தை மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என புலம்பி வந்துள்ளார். மேலும் தனியார் நிறுவன ஊழியரான குப்புசாமி விசாரணைக்கு பயந்து தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து கருகிய நிலையில் கிடந்த குப்புசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குப்புசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து அறிந்த குப்புசாமியின் உறவினர்கள், 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் முன்னாள் எம்பி கோ.அரி தலைமையில் திருத்தணி-சித்தூர், திருத்தணி-அரக்கோணம் சாலைகளில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து மாலை நேரத்தில் விடுவித்தனர். மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.