தமிழகத்தில் ஆண்டுதோறும் தை முதல் நாள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை வெவ்வேறு பெயர்களில் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்ட போதிலும் தமிழக மக்கள் இதை நான்கு நாட்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த தனிப்பெரும் பண்டிகையை தமிழர் திருநாள், தை திருநாள், அறுவடை திருநாள் என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பற்றியும், அதைக் கொண்டாடும் முறைகள் பற்றியும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் சாதி, மத, பொருளாதார பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது இன்றுவரை பொங்கல் பண்டிகைதான். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில்தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும். புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு; இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் பண்டிகை.
இப்பண்டிகையை கொண்டாட ஒரு வாரத்திற்கு முன்பாகவே மக்கள் தயாராகி விடுவர். தை மாதம் வருவதற்கு முன்னரே வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்வது, வீட்டிற்கு வண்ணம் பூசுவது, பழைய பொருட்களை போகி அன்று எரிப்பது, மாவிலை தோரணம் கட்டி வாசலில் வண்ண கோலமிட்டு பொங்கல் பானையை மாவிலை, மஞ்சள் கிழங்கு, பூக்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றால் அலங்காரம் செய்வது போன்ற அனைத்து வேலைகளையும் செய்ய தொடங்கிவர். பிறகு பொங்கலன்று பாரம்பரிய முறைப்படி வெளிப்புறங்களில் அடுப்பில் பொங்கல் பானையை வைத்து பொங்கல் வைப்பர். இந்தப் பண்டிகை 4 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1. போகி:
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 29-ம் தேதி போகி கொண்டாடப்படுகிறது. நம் வீட்டில் உள்ள பழையவற்றை போக்கி, வீட்டை தூய்மை படுத்துவதே போகி பண்டிகை. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
2.தைப்பொங்கல்
தைப்பொங்கல் தமிழரின் தனிப்பெரும் விழா. ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நெல் விளையச்சலுக்கு உதவும் சூரியனுக்கு அதிகாலையில் புது பானையில் புதிய அரிசியை இட்டு பொங்கலிட்டு, படையல் செய்வது வழக்கம்.
3.மாட்டுப் பொங்கல்:
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. எனவே வேளாண்மைக்கு உதவிய இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இந்நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் வீர விளையாட்டாக நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் தை இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
4.காணும் பொங்கல்
ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் உழைத்த மக்கள், தங்கள் உறவுகளை கண்டு மகிழ்ச்சியுடன் குதூகலிக்கும் நாளாக காணும் பொங்கல் உள்ளது. இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் வழக்கம்.