தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களையும், பல்வேறு துறைகளின் செயலாளர்களையும் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்சியை தருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளில் அமைச்சர்கள் அனைவரும் எந்த அளவு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள் என்பதை மாதம்தோறும் ரிப்போர்ட் கார்டு மூலம் ஸ்டாலின் மதிப்பீடு செய்து வருகிறார். இதில் கமிஷன் புகாரில் சிக்கும் அமைச்சர்கள், சரியாக செயல்படாதவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் என்று வகைபடுத்தி இந்த ரிப்போர்ட் கார்டு மாதந்தோறும் முதல்வரின் பார்வைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் மாத ரிப்போர்ட் கார்டு முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில் சரியாக செயல்படாத அமைச்சர்கள் பட்டியலில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனைப்போலவே அதிக புகார்கள் வரும் அமைச்சர்களின் பட்டியலில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனைதொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவி வரும் இந்த இக்கட்டான நேரத்தில் முதல்வரின் ரிப்போர்ட் கார்டில் இடம் பெற்ற ஒரே காரணத்தால் தங்கள் அமைச்சர் பதவி உடனடியாக பறிபோய்விடாது என்ற தைரியத்தில் அமைச்சர்கள் இருந்தாலும், முதல்வரின் பிளாக் லிஸ்டில் இடம் பெற்றுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் தங்கள் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளதாக தெரிகிறது.