மருத்துவத்துறையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக திகழ்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது, ” இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ். இடங்களையும் மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் மத்திய அரசுக்கும் குறிப்பாக, பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த நாளில் – மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்க இருக்கிறார்கள். அதற்காக தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அரசின் சார்பிலும், தனிப்பட்ட என் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின்போது தமிழுக்கு இத்தகைய சிறப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
தமிழுக்குச் சிறப்புச் செய்யும் செம்மொழி நிறுவனத்தின் கட்டடத்தையும் – தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வைக்கக்கூடிய பிரதமருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி – தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.