கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே.
எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. மேலும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் இன்று காணொளி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அந்த ஆலோசனைக்கூட்டம் மாலை 4:30 மணி அளவில் நடைபெறும். இந்த ஆலோசனையின் போது தடுப்பூசி செலுத்தும் வேகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை பற்றி பிரதமர் மோடி விவாதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.