பணம், நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காமராஜர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 11-ஆம் தேதி கார்த்திகேயன் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த கார்த்திகேயன் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.35000 திருட்டு போனது கார்த்திகேயனுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து கார்த்திகேயன் விளாத்திகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக குற்றவாளி கைது செய்யப்படாமல் இருந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் படி தனிப்படை காவல்துறையினர் பணம், நகைகளை கொள்ளையடித்த மர்மநபரை தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் விவேக்ராஜா என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சாவி வைத்திருக்கும் இடத்தை அறிந்து விவேக் ராஜா பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விவேக்ராஜாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த 11 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.