இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் அதிகமாக பரவி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று மட்டுமே நம்மிடம் இருக்கும் ஆயுதம். எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்பிறகு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இணைய நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களை முன்கள பணியாளராக கருதப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உள்பட அனைத்து அரசுத் துறை ஊழியர்களும் முன்கள பணியாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். எனவே அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.