தமிழகத்தில் மின் கட்டணத்தை கணக்கிட விரைவில் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் முயற்சியை மின் வாரியம் மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் கைபேசி செயலி ஒன்று வடிவமைக்கப்பட உள்ளது. இதனை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கட்டணத்தை கணக்கீடு செய்து கொள்ளலாம்.
மேலும் அந்த செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த, ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண ரசீது குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்பட்டுவிடும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இந்த செயலி சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதிலுள்ள சாதக மற்றும் பாதக விஷயங்களை நுகர்வோர் கண்ணோட்டத்தின் வாயிலாக ஆராய்ந்து தலைமையகத்துக்கு தெரிவிப்பார்கள். இதனைத் தொடர்ந்து நுகர்வோர் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் இது விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.