Categories
அரசியல்

“அன்னைக்கு ராத்திரியே இது ஏன் நடக்கணும்”…. இது திட்டமிட்ட சதி…. கோபத்தின் உச்சத்தில் முத்தரசன்…..!!!!

“பெரியார் சிலையை அவமதிப்பது மனநிலை பாதித்த காரியம் இல்லை. இது திட்டமிட்ட சதிச்செயல் எனவே இதனை செய்தவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு கடந்த சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவைக் கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கோவை மாநகரில் உள்ள வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள பெரியார் ஈ.வெ.ரா. சிலைக்கு, கடந்த 08.01.2022 ஆம் தேதி இரவில் சமூக விரோதிகள் செருப்பு மாலை போட்டு, காவிப்பொடி தூவி அவமதித்துள்ளனர்.

சமூக நீதி சார்ந்த ஜனநாயகத்திற்காக போராடிய தலைவர்களை இழிவுபடுத்தி, தரம் தாழ்ந்து பேசுவது, மறைந்த தலைவர்களை அவமதிப்பது போன்ற ஆத்திர மூட்டும் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழக மக்களின் உயர் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் 08.01.2022 ஆம் தேதி கூட்டிய சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்தாலோசித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதே நாளில் இரவில் கோவையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு, சமூக நீதி உணர்வாளர்களை ஆத்திரமூட்டி, மக்கள் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் சமூக விரோதிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

இது ஏதோ தற்செயலாக, மனநிலை பாதித்தவர்கள் செய்து விட்ட காரியம் அல்ல, திட்டமிட்டு நிறைவேற்றிய சதிச் செயலாகும். சட்டம் – ஒழுங்கு நிர்வாகத்திற்கு விடப்பட்ட சவாலாகும். ஜனநாயக சக்திகளை சீண்டி விடும் நோக்கம் சமூக விரோதிகளின் இழி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக் கண்டிப்பதுடன், இது போன்ற மறைந்த தலைவர்களை அவமதிக்கும் இழி செயலை கொடுங் குற்றமாக கருதி, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Categories

Tech |