மும்பையில் விமானத்தை இழுத்துச் செல்லும் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் போது, விமானங்களை நகர்த்துவதற்காக ’புஷ்பக் டக்’ எனப்படும் வாகனம் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மும்பை விமான நிலையத்தில் இத்தகைய இழுவை வாகனத்தில் திடீரென தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பணியாளர்களின் துரித நடவடிக்கையால் தீ அணைக்கப்பட்டது. இழுவை வாகனத்திற்கு மிக அருகில் தான் மும்பையில் இருந்து ஜாம்நகர் செல்லும் ஏர் இந்தியா விமானம் 85 பயணிகளுடன் நின்று கொண்டிருந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.