தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கை பயன்படுத்தி ஒலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது போக்குவரத்து அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளிமாநிலத்தில் இருந்து ரயில், விமானம் மூலம் வரும் பயணிகள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அதை சாதகமாக்கி ஓலா, உபர் நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மருத்துவ காரணத்திற்காக பயணிப்போரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி வேறு காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளை அழைத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.