தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் கூட்டுறவு சங்கங்களில் 31/03/2021 வரை 5 பவுன் அளவுள்ள நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு இந்த நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார். நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக அதிகாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் விவரங்கள் சேகரித்தபோது நகைக்கடன் வாங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. இதன் காரணமாக முதலமைச்சர் பல நிபந்தனை அடிப்படையில் நகைக்கடன் கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.
அதன்படி 2021ல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபந்தனைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தது. இந்த கருத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் திமுக கட்சி பாரபட்சம் காட்டி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் ஆரணி, காஞ்சிபுரம், உத்திரமேரூர் உட்பட பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றுள்ளதாகவும் மற்றும் திருவண்ணாமலையில் மார்வாடி ரத்னா லால் என்பவர் ஒரே ஆதார் அட்டை, குடும்ப அட்டையை வைத்து 5 பவுனுக்கு கீழாக மொத்தம் 672 நகை கடன்களை பெற்றுள்ளார். அதேபோன்று புதுக்கோட்டை கீரனூரில் ரூ1 கோடி மதிப்பிலான 102 நகை பைகள் இல்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் முறைகேடுகள் குறித்து சட்டப்பேரவையில் முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தமிழகத்தில் கரும்பு கொள்முதல் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. ஆகவே இடைத்தரகர்கள் யாரும் உள்நுழைய முடியாது என்று கூறினார். இதனைத்தொடர்ந்து கூட்டுறவு சங்கத் தேர்தல் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக பேசும்போது அதிமுக ஆட்சியில் தேர்தலே நடத்தாமல் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் யார் முறைகேடு செய்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.