ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தாத்தப்பன்குளம் தெருவில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். ஆர்.எஸ்.எஸ்சின் ஒரு பிரிவான தர்ம ஜாக்ரான் அமைப்பின் தேனி மாவட்ட தலைவரான இவர் கம்பம்-குமுளி சாலையில் இருசக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரவிக்குமார் வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து உருட்டு கட்டைகளாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ரவிக்குமாரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கம்பம் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரவிக்குமாரை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதேபோல் தேனி அரசு மருத்துவமனை முன்பு பாஜக மாவட்ட செயலாளர் பாண்டியன், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன்ஜி, ஆர்எஸ்எஸ் மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோரின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.