குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசிவரும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இடையான்குடி அருகே சாலிகிராமம், கோட்டையூர், அண்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.