தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 10-ஆம் தேதி வரை வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதேசமயம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.
அதில், ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் மத்திய, மாநில அரசுத்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பொதுப் போக்குவரத்து துறை, அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை, மருத்துவம் சார்ந்த சேவைகள் செய்பவர்களின் அடையாள அட்டையை பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.