தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதிய உணவுடன் தினமும் ஒரு முட்டை வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் 50 லட்சம் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மாதம் 3 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதனால் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கோடிக்கும் அதிகமான முட்டைகள், பள்ளிகளிலேயே தேங்கியுள்ளன. அவை அனைத்தும் அழுகி வீணாகும் நிலையில் உள்ளது. இதையடுத்து தமிழக சமூக நலத்துறை கமிஷனர் உத்தரவின் படி, சத்துணவு திட்ட முட்டைகளை பள்ளிகளிலிருந்து மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பள்ளிகளில் முட்டைகளை தேக்கி வைக்க கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.