தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு 4,862 பேருக்கு உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனை வருகின்ற 9ம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி 1 முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 10- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராமதாஸ் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மேலும் வணிக வளாகங்கள் மற்றும் பெரிய கடைகளையும் மூட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதற்கட்டமாக மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் அத்துடன் கொரோனா வழிகாட்டுதல் வழிமுறையை பின்பற்றாத மதுக்கடைகள் திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.