ஆந்திராவில் ஒரு இளைஞர் வேர்கடலை வியாபாரியிடம் கொடுக்க வேண்டிய 25 ரூபாய் கடனை, 12 வருடங்கள் கழித்து வட்டியுடன் திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திராவில் இருக்கும் காக்கிநாடாவில் வசிக்கும் மோகன் என்ற நபர் கடந்த 2010 ஆம் வருடத்தில் தன் மகன் பிரவீனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றபோது, அங்கு வேர்கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியிடம் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கியிருக்கிறார். ஆனால், அப்போது அவரிடம் பணம் இல்லாததால், அந்த வியாபாரி, “அடுத்த நாள் தாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.
ஆனால், அதன்பிறகு மோகனும் அவரின் குடும்பத்தினரும் அமெரிக்கா சென்றுவிட்டனர். எனினும் பிரவீன் எப்படியும், அந்த 25 ரூபாய் கடனை வியாபாரியிடம் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்துள்ளார். எனவே பிரவீன் தன் உறவினரான காக்கிநாடா எம்எல்ஏ சந்திரசேகரிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.
மேலும் அந்த வேர்க்கடலை வியாபாரியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதன்பிறகு, எம்எல்ஏ சந்திரசேகர், தன் வீட்டிற்கு அந்த வியாபாரி மற்றும் அவரின் மனைவியை வரவழைத்தார். அவரிடம், பிரவீன் “நான் 12 வருடங்களுக்கு முன் கொடுக்க வேண்டிய 25 ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 23,000-ஆக கொடுக்கிறேன்” என்று கூறி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.