குடிப்பழக்கத்தை விடுமாறு குடும்பத்தினர் கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சீத்தாராம்பாளையத்தில் சின்னசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். பட்டறை காவலாளியான இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் இளங்கோ, மோகன் என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சின்னசாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடும்பத்தினர் குடிபழக்கத்தை கைவிடுமாறு சின்னசாமியை கண்டித்து அவருடன் பேசாமல் இருந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சின்னசாமி அப்பகுதியில் உள்ள பழனியாண்டவர் கோவில் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து திருச்செங்கோடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் சின்னசாமியின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.