தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும். மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர மற்ற அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.