பீகாரில் இளைஞர் ஒருவர் ஆற்றங் கரையில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் பகல்பூரை சேர்ந்த அபிஷேக் குமார் என்ற 21 வயது இளைஞர். இவர் தனது நண்பர்கள் 7 பேர் மற்றும் குடும்பத்தினருடன் சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் திபெத் எல்லையோரம் உள்ள லட்சங் பகுதியில் லட்சங் சூ என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் அழகு பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இந்த பகுதியில் புகைப்படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதேபோல் அபிஷேக் குமாரும் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆற்றின் கரையில் உள்ள ஒரு பாறையின் மீது ஏறி செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாறை வழுக்கி அவர் ஆற்றில் விழுந்துள்ளார். இதனால் அவர் பதில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தோ திபெத்திய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் அபிஷேக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அபிஷேக் குமார் அடித்துச் செல்லப்பட்டு பல மணி நேரம் ஆவதால் அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. செல்பி மோகத்தால் இளைஞரொருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.