Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் 15 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடிய விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து 8 வாலிபர்கள் கடந்த 1-ஆம் தேதி கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் கொடைக்கானல் பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் தங்கியிருந்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் மீண்டும் காரில் ஈரோட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இந்த காரை கவுந்தப்பாடி கொட்டாப்புளிமேடு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி கார் நின்றுவிட்டது.

இந்த விபத்தில் இசாக், நிக்சன், அவினாஷ், சசிகலா, கண்ணன், பிரகதீஷ், ரோகினி, கபில் ராஜ், பெர்சி, வனஜா, சங்கர் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 15 பேரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரான முருகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |