தொழிலாளர்களுக்கு ஓய்வு காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டத்திற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்- 1952. இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இருக்க முடிகிறது.
தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் பெரும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாயில் இருந்து 9,000 -ஆக உயரும் வாய்ப்புள்ளது. இதுபற்றி ஓய்வூதியதாரர்கள் தரப்பில் பல காலமாக கோரிக்கை முன் வைக்கப் பட்டிருந்த நிலையில், இது பல ஆலோசனைகளை கடந்து தற்போது முடிவெடுக்கும் தருணத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு, இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இந்த கூட்டத்தில் 2 மிக முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. அது என்னவென்றால், புதிய தொழிலாளர்கள் கொள்கை மற்றும் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது ஆகியவை ஆகும். கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த பரிந்துரைகள், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1000- ரூபாயில் இருந்து 3,000-ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தது.
ஆனால் அதே சமயத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களது மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் 9,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக முடிவெடுக்க அளிக்கப்பட்டிருக்கும் யோசனைகளில், ஒரு தொழிலாளி ஓய்வு பெறுவதற்கு முன்பு பெற்ற ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு, அவரது ஓய்வூதியத்தை நிர்ணயிப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் கூட்டத்தில் இந்த பரிந்துரை குறித்தும் ஆலோசிக்கப்படவிருக்கிறது. மேலும் புதிய தொழிலாளர்கள் கொள்கை குறித்த மசோதாக்கள் நடைமுறைக்கு வந்தால், வாரத்தில் பணி நாட்கள் குறைந்து கைக்கு வரும் ஊதியம் குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கும். நிலையில் மறுபக்கம் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.