ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற வாலிபரை உடனடியாக கைது செய்த தனிபடையினரை மாநகர கமிஷனர் பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் கீழச்சந்தைப்பேட்டையில் ஸ்டேட் வங்கியின் கிளை மற்றும் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நள்ளிரவு சமயத்தில் ஏ.டி.எம் மையத்தில் மர்மநபர் ஒருவர் புகுந்து இயந்திரத்தை உடைத்து திருட முயன்று உள்ளார். இதனால் ஏ.டி.எம் மையத்தில் அபாய ஒலி அளித்ததால் அந்த நபர் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இந்த அபாய எச்சரிக்கை மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கும் சென்றுள்ளது. இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் மீனாட்சிஅம்மன் கோவில் போலீஸ் உதவி கமிஷனர் முத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கீழச்சந்தைப்பேட்டையில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏடிஎம் மையத்திற்கு அருகே மறைவான பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அந்த நபர் கீழச்சந்தைப்பேட்டையை சேர்ந்த யாசின்அலி என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து ஏ.டி.எம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் யாசின்அலி ஏ.டி.எம் எந்திரத்தை திருட முயன்றது தெளிவாக பதிவாகி இருந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு யாசின்அலியை கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை ஒரு சில மணிநேரத்திலேயே கைது செய்த தனிப்படையினரை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டியுள்ளார்.