திருமண மண்டபத்தின், திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான கொரோனா விதிமுறையை கடைபிடிக்காததை அன்பில் மகேஷ் நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு விழாவில் பங்கேற்ற போது, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அதிக கூட்டம் கூடியதாக விமர்சனங்கள் எழுந்தது. அதாவது மயிலாடுதுறையில் திருமண மண்டபத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர். அப்போது, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, “தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கும் நிலையில், நான் இத்தனை பேர் கூடியிருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றி, முதலமைச்சர் கண்டிப்பாக என்னிடம் கேள்வி கேட்பார்.
தடுப்பூசி செலுத்துவதில், நாட்டில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. எனினும், தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. எனவே, கொரோனா விழிப்புணர்வு கூட்டத்திற்காக இது நடைபெற்றது என்று கூறி முதலமைச்சரிடம் நான் தப்பித்து விடுவேன்.
ஆனால், இதற்கு முன் பேசிய தலைமை கொறடா, இக்கூட்டம் மாநாடு போல நடப்பதாக பேசினார். அவர் முதலமைச்சருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று விதிமுறைகளை கடைபிடிக்காததை நகைச்சுவையாக கூறி சமாளித்திருக்கிறார். எனினும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இந்த கூட்டம் நடைபெற்றது அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.