சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் லாரி டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கணேசன் ஆனைமலையில் இருக்கும் தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து வேலை தேடி வந்துள்ளார். அப்போது கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் கணேசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது நடந்தவற்றை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.