சென்னை மதுரவாயல் பகுதியில் மணி பர்சை திருடியதால் வந்த தகராறு காரணமாக சொந்த நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவள்ளூர் பகுதியை அடுத்த வேப்பம்பட்டை நகரை சேர்ந்தவர் முரளி. இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த சிம்சன் சுப்பிரமணியன் அரவிந்த் ஆகிய மூன்று பேருடன் மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர்.
நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் நேற்றைய தினம் முரளி தனது நண்பன் சிம்சனுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சிம்சன் பெரிய கல்லை முரளியின் தலையில் தூக்கிப் போட்டு உள்ளார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே முரளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து நண்பன் இறந்ததை அறிந்த சிம்சன் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடினார். அறையில் உடனிருந்த சக நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பியோடிய முரளி குறித்து விசாரித்த பொழுது அவர் தனது சொந்த ஊருக்குத் தான் தற்போது சென்றிருக்க வேண்டும் என்று யூகித்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சில நாட்களுக்கு முன்பாக தனது நண்பன் மணி பர்சை திருடி அதில் இருந்த பணத்தை செலவு செய்து விட்டதாகவும் இதனால் முரளி தன்னை கண்டித்ததால் ஆத்திரமடைந்து போதையில் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.