இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது ராஜஸ்தான் அரசு நேற்று ஊரடங்கு உள்ளிட்ட புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி பொது, சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார மற்றும் மத நிகழ்ச்சிகள் பேரணிகள், வேலைநிறுத்தம், போராட்டங்கள் என அனைத்து வகையான கூட்டங்களிலும் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 100 பேர் திருமண விழாக்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். இந்த விதிகள் ஜனவரி 7 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் இருந்து விமானங்கள் அல்லது ரயில்கள் மூலம் ராஜஸ்தானுக்கு வருபவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டசான்றிதழ் மற்றும் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
இந்த சான்றிதழ் எதுவும் இல்லையென்றால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அறிக்கை வரும் வரை ஏழு நாட்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் கடைகள், கிளப்புகள், ஜிம்கள், உணவகங்கள், மால்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். ஜனவரி 31ஆம் தேதி முதல் திரையரங்குகள், மால்கள் மற்றும் சந்தை உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதற்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.