செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக மக்களின் பேராதரவுடன் மலர்ந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி ஏழு மாத காலத்தின் கடந்த 200 நாட்களாக பலத்த நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் கொடும் துயரம் சுற்றிவளைத்த நேரத்தில், முதல்வராக பொறுப்பேற்ற தளபதி ஸ்டாலின் அவர்கள் ஓயாத கடல் அலைபோல தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவிலே தலை சிறந்த முதல்வர் என்று பாராட்ட பெற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஆற்றும் பணிகள் குறித்து உயர் நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை. முதல்வர் பொறுப்பேற்று உடனே ஸ்டாலின் கையெழுத்து போட்ட 5 திட்டங்களிலும் சமூகநீதி, மக்கள் நலன், ஜனநாயகம் ஆகிய மூன்று கூறுகள் இடம் பெற்றிருக்கிறது.
அதன்பின்பு அரசு அறிவித்த அனைத்து திட்டங்களிலும், அறிவிப்புகளிலும், நிதிநிலை அறிக்கையிலும் இதே 3 கூறுகள் தான் உள்ளன. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்று குரலுக்கு இலக்கணமாக சரியான நபர்களை முக்கிய பொறுப்புகளை நியமனம் செய்து ஆளுமைத் திறனை முதல் முதலமைச்சர் நிரூபித்தார்.
தனக்கு ஆலோசனை வழங்கவும் திறமை வாய்ந்த அதிகாரிகளை கொண்டு வந்துள்ளார். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமித்து உள்ளார், பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச அறிஞர்கள் கொண்ட குழு அமைத்துள்ளார், திராவிட இயக்க ஆட்சியாக நீதிக்கட்சி அரசு பொறுப்பேற்க நூற்றாண்டு தொடக்கத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் திராவிட இயக்க லட்சியங்களுக்கு செயல் வடிவம் தந்து வருகிறார்.
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 சமூகநீதி நாளாக பிரகடனம் செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது திராவிட இயக்க தோழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்திருக்கிறது. மருத்துவ படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடை பாதுகாக்க உச்சநீதி மன்றம் வரை சென்று போராடி வெற்றி கண்டுள்ளது திராவிட முன்னேற்ற கழக அரசு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை செயல்படுத்தி பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை, அறநிலையத்துறைக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான கோடி சொத்துக்கள் மீட்பு, இது எல்லாம் மகத்தான சாதனைகள், நீராடும் கடலுடுத்த என மனோன்மணியம் சுந்தரனார் தமிழ் தாய் வாழ்த்து பாடல் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியில் பயின்றோருக்கு வேலைவாய்ப்பு, தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் ஆகியவை தமிழ் மொழிக்கு திமுக அரசு ஆற்றிய அரும்பணிகள் ஆகும்.வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, மக்களை தேடி மருத்துவம், நகர்புற மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தவும் முயன்றுள்ள திமுக அரசின் சாதனைகள் இன்னும் தொடர்கின்றன.