காங்கிரஸ் மற்றும் பாஜக, மக்கள் பணத்தில் கூட்டங்களை நடத்துகிறார்கள் என்று மாயாவதி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
உத்திரபிரதேசத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற தொடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் தகுந்த நேரத்தில் நடக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் அமைதி காத்து வருகிறது.
தற்போது வரை, எந்த கூட்டத்திலும் மாயாவதி பங்கேற்கவில்லை. அக்கட்சிக்கு முன்பு போன்று மக்களின் ஆதரவு இல்லை. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அமித்ஷா பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய போது, “தேர்தல் வந்த பின்பும் மாயாவதி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அவர் பயந்து விட்டார்” என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுத்து, மாயாவதி பேசியதாவது, “என்னை பார்த்து பயந்ததாக அமித்ஷா கூறியிருக்கிறார். அவர்கள் அரசாங்கத்தின் பணத்தை வைத்து குளிர்காய்கிறார்கள். அவர்களுக்கு எப்படி பயம் இருக்கும்? எங்களின் பிரச்சார ஸ்டைல் தனி, பிறரைப் பார்த்து காப்பி அடிக்க தேவையில்லை.
பாஜக மற்றும் காங்கிரஸ் அரசாங்கத்தின் பணத்தை செலவழிக்கிறார்கள். ஏழைகளின் பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது பொதுக்கூட்டங்கள் நடத்தாமல் அமைதியாக இருப்பார்கள். இவர்களின் கூட்டங்களில் பங்கேற்பவர்களில் அதிகமானோர் அரசுப் பணியாளர்களும், தேர்தலில் டிக்கெட் கேட்போருக்கு ஆதரவளிப்பவர்களும் தான்.
எங்களின் கட்சி ஏழைகளுக்குரியது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானது. முதலாளிகளின் கட்சி கிடையாது. நாங்கள் அடுத்தவர்களை பார்த்து காப்பியடித்து மிகப்பெரிய கூட்டம் நடத்தும் அளவிற்கு பணம் எங்களிடம் இல்லை. தேர்தலில் களமிறங்குவதற்கு என்று எங்களுக்கு தனி பாணி இருக்கிறது. அதை நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறியிருக்கிறார்.