அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் முக ஸ்டாலின் திருச்சியில் நடத்திய மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிற, இந்த சமயத்தில், திருச்சியில் அதிக மக்களை கூட்டி முதலமைச்சர் பேசியிருக்கிறார். இது, “வேலியே பயிரை மேய்வது” போன்று இருக்கிறது.
முதலமைச்சர், அவர் அறிவித்த கட்டுப்பாட்டை அவரே மீறியுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி அன்று மக்கள் அதிகம் கூடக்கூடாது என்ற தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அதனை மீறி நலத்திட்ட உதவிகள் என்னும் பெயரில், திருச்சி மற்றும் தஞ்சாவூரில் அதிகப்படியான மக்களை கூட்டி முதலமைச்சர் பேசியிருக்கிறார்.
மேலும், முதலமைச்சர் திருச்சி கூட்டத்தில், “அமைச்சர் நேரு மக்கள் கடலை உருவாக்கியிருப்பதாகவும், நேரு என்றாலே மாநாடு, மாநாடு என்றாலே நேரு என்றும் பேசினார். இதன் மூலம் முதலமைச்சர் அறிவித்த கட்டுப்பாட்டை அவரே மதிக்காதது, தெளிவாக தெரிகிறது. முதல்வரே விதிமீறல் செய்யும்போது, மக்கள் எவ்வாறு விதிகளை மதிப்பார்கள்? என்று தெரிவித்துள்ளார்.