டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏகாட்டூர் கிராமம் அம்பேத்கர் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருமுல்லைவாயல் பகுதியில் கிடக்கும் குப்பைகளை சேகரிப்பதற்காக வெண்ணிலா டிராக்டரில் டிரைவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டு சென்றுள்ளார். இந்த டிராக்டரை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சோழம்பேடு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெண்ணிலா டிராக்டரில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.
இதனை கவனிக்காமல் பிரகாஷ் வாகனத்தை வேகமாக இயக்கியதால் வெண்ணிலாவின் மீது டிராக்டரின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வெண்ணிலாவே அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வெண்ணிலா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.